×

சினிமாபட பாணியில் துரத்தி பிடித்த போலீசார் ஆடம்பர வாழ்க்கை வாழ பைக் திருடிய வாலிபர்கள்: வில்லியனூரில் பலே திருடர்கள் கைது

 

வில்லியனூர், பிப். 19: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பைக் திருடிய 2 வாலிபர்களை வில்லியனூர் போலீசார் சினிமா பட பாணியில் துரத்தி பிடித்து கைது செய்தனர். வில்லியனூர் காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, கஞ்சா உள்ளிட்ட குற்ற செயல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க மேற்கு எஸ்பி வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் வடமங்கலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் வேகமாக வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கிய போது அவர்கள் நிற்காமல் பறந்து சென்றனர். உடனே போலீசார் சினிமா பட பாணியில் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பிறகு அவர்களை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை கேட்டபோது ஆவணம் எதுவும் இல்லை என கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் பைக்கை பறிமுதல் செய்து வாலிபர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் விழுப்புரம் அருந்ததி வீதியை சேர்ந்த யுவராஜ் (27), கப்பியாம்புலியூரை சேர்ந்த சந்தோஷ் (21) என்பதும் இவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. தீவிர விசாரணையில் இவர்கள் இருவரும் தமிழகத்தில் பிரபல பைக் திருட்டு குற்றவாளிகள் என்பதும், யுவராஜ் மீது கொலை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளும், சந்தோஷ் மீது வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 விலை உயர்ந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கூறுகையில், வாலிபர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்தனர். அப்போது அவர்களை நிறுத்தியபோது நிற்காமல் சென்றதால் அவர்களை போலீசார் விரட்டி சென்று வடமங்கலம் பகுதியில் பிடித்தோம். வில்லியனூர், திருபுவனை, அரியூர், திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பைக்கை திருடிக்கொண்டு நகர பகுதிகளில் உள்ள ஏதேனும் ஒரு பைக் பார்க்கிங் இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள்.

பின்னர் போலீசார் அந்த பைக்கை தேடும் பணியில் இருந்து சற்று ஓய்ந்தவுடன் சில நாட்கள் கழித்து அந்த பைக்கை விழுப்புரம், சென்னை, திண்டிவனம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு எடுத்து சென்று அதன் பாகங்களை பிரித்து விற்பனை செய்துவிடுவார்கள். அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு வசதியாக, ஆடம்பரமாக வாழ்வார்கள். அந்த பணம் காலியான பிறகு மீண்டும் பைக் திருட்டில் ஈடுபடுவார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழவும் சுலபமாக பணம் சம்பாதிக்கவும் இவர்கள் தொடர்ந்து பைக் திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர், என்றார். இதையடுத்து அவர்கள் மீது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள விலையுர்ந்த 6 பைக்குள் பறிமுதல் செய்தனர்.

The post சினிமாபட பாணியில் துரத்தி பிடித்த போலீசார் ஆடம்பர வாழ்க்கை வாழ பைக் திருடிய வாலிபர்கள்: வில்லியனூரில் பலே திருடர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Bale ,Villayanur Willianur ,Willianur police ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை பறிமுதல்